Saturday, April 30, 2022

ஊருக்கு நடுவே வேண்டும் ஒரு அம்பேத்கார் தெரு

அன்னைக்கு தான் என் வாழ்க்கைல நானும் ஒரு ஆளுனு உணர்ந்த முதல் நாள், இன்னைக்கும் 'குடும்ப ஜனநாயகத்த' பத்தி பேச அந்த நிகழ்வு நல்ல உதாரணமா இருக்கு. ஏப்ரல் மாச கடைசியில ஒரு நாள்  தீடிர்னு எங்க அப்பா அம்மா என்ன கூப்பிட்டு உட்கார வச்சாங்க பெரியவங்க கிட்ட பேசுற மாதிரி பேச ஆரம்பிச்சாங்க 

"உன்ன வேற ஸ்கூல்ல சேக்க போறோம்.., அக்கா அண்ணா படிக்கிற ஸ்கூல்ல படிக்க மாட்ட புது ஸ்கூல் அக்கா அண்ணா ஸ்கூல்ல விட சின்னது.. ஆனா அம்மா உன்ன நல்லா படிக்க வைப்பேன்..! பின்னாடி நீ உன்ன மட்டும் சின்ன ஸ்கூல்ல படிக்க வச்சிட்டோம்னு கஷ்ட படக்கூடாது.! சரியா ?!" னு கேட்க நானும் "நான் கஷ்ட படமாட்டேன். நான் நல்லா படிப்பேன்!"னு எங்க அப்பா அம்மாக்கு பெரிய உதவி பண்ண சந்தோஷத்தல தலை ஆட்டினேன். அப்ப எங்க அப்பா அம்மா சத்தமில்லாம பெருமூச்சு விட்டதையும் பாத்து சந்தோஷ பட்டேன்.

கூடவே "புது ஸ்கூல் கூட கிறிஸ்டியன் ஸ்கூல், இங்க மாதிரியே அங்கேயும் நல்ல பழக்க வழக்கம் சொல்லி கொடுப்பாங்க நல்லா படிக்க வைப்பாங்க"னு எனக்கும் அவங்களுக்கும் நம்பிக்கை கொடுத்துகிட்டாங்க.

அப்பவே ஏசுவும் ஒரு கடவுள் னு ஏற்கனவே இருந்த சிவன், பிள்ளையார், பெருமாள், அனுமான், கங்கை அம்மன் ன்ற எனக்கு தெரிஞ்ச கடவுள் லிஸ்டுக்கு வந்து சேந்தார். என் அறிவு சின்ன சின்னதா வளர்ந்த மாதிரியே என் ஊரும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்துனால கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துட்டு வந்துது 

கம்பம் நட்டு வொயர் வலிச்சு கரண்ட் கொடுத்திருந்த சில தெருமுக்கு கமபத்துல சோடியம் லைட் வந்துச்சு அதே சமயம் முச்சந்தியில முட்ட செய்வினை வெக்கிறவங்கலையும் அந்த மஞ்சள் வெளிச்சம் துரத்திச்சு.!

தெருக்கு ஒரு பக்கம் கரண்ட் கம்பம் நிக்க இன்னொரு பக்கம் மூணடி பள்ளம் போட்டு ஜோட்தலை தாட்டிக்கி வெள்ள பைப் பொதைச்சு இரும்பு கொழாவ கரண்ட் கம்பத்துக்கு துணையா நிக்க வச்சாங்க. அது நாள் வரைக்கும் குடி தண்ணிக்காக கங்கை அம்மன் குளத்துக்கும் துணி துவைக்க காவாய்க்கும் நடந்த என் அம்மாவுக்கு இது ஒரு நிம்மதி பெரு மூச்சா இருந்துச்சு. ஆனா என்னோட கிராம சுற்றுலா தெரு முச்சந்திலேயே முடிஞ்சி போச்சு. அது நாள் வரைக்கும் காவா தண்ணில மீன் குட்டி பாக்குறது, அல்லி தண்டுல காத்து ஊதி விளையாடுறது எல்லாம்.. கொழா இல்ல ட்ரன்ஸ்பார்மர்  ரிப்பேர் ஆன புண்ணியத்துல அபூர்வமா மறுபடியும் விளையாடுற வாய்ப்பு கெடச்சது. இருந்தாலும் எங்க அம்மாவுக்கு முழங்கால் தண்ணியில பாவாடைய தூக்கி சொருகி துணி துவைக்கிற அவஸ்த இல்லாம இருந்துச்சு.. அந்த கொழா புண்ணியத்துல!.


அந்த குட்ட கொழா பக்கத்துலயே பணங்கழியாட்டம்  சிமெண்டுல பெயர் பலகை வெச்சு மஞ்சள் பெயிண்ட் அடிச்சு கருப்பு பெயிண்ட்ல தெரு பேரு எழுதி வச்சாங்க. அது நாள் வரைக்கும் ஒத்தவாடை தெருனு கூப்ட தெருவ காமராஜர் தெருனு பேர் மாத்திட்டதா சந்தோஷ பட்டாரு அப்பா. இனிமேல் எவனும் நக்கலா 'ஒ.த்தவாடை ஒ.த்தவாடை'னு ரோட்டுல கூப்பிட மாட்டான்னு கொஞ்சம் சந்தோஷம் தான். என்னதான் அப்டி கூப்பிட்டாலும் அவரு அத பெருசா எடுத்துக்கினது இல்ல.     

 

நாடார் கடை இருந்த தெருவ காமராஜர் தெருன்னு மாத்துனது போலவே முன் தெரு பேரு 'ராமதாஸ் தெரு'னு பின் தெரு 'ஏழுமலை நாயக்கர் தெரு'  அதிமுக பிரமுகர் இருந்த தெரு பேர் 'MGR தெரு', காங்கிரஸ் கட்சிக்காரர் இருந்த தெரு 'நேரு தெரு', திமுக தலைவர் இருக்கிற தெரு 'கலைஞர் தெரு', அதிமுக தலைவர் இருந்த புது ஏரியா 'MGR நகர்' னு பேர் வெச்சதாவும் சொன்னார்.


அதேபோல முக்கியமா பஸ் ஸ்டாண்ட் ஒட்டி இருக்குற 'காலணிய காலணினு கூப்ட கூடாது' ஆனா 'அம்பேத்கர் நகர்'னு பேர் மாத்திட்டாங்கனு சொன்னார். 'காலணி னா என்ன அப்டி ஏன் கூப்பிட கூடாது?' னு கேட்டதுக்கு...


அவங்க பாட்டி வீட்ல மாட்டு வண்டிகள பொறுப்பா பாத்துக்கிட்ட 'வரதன்' என்கிற 'வரதர்' கதை பத்தி சொன்னாங்க. அவரு குடிச்ச காபி டம்ளார நெருப்புல வாட்டி எடுத்த பிறகுதான் வீட்டுக்குள்ள வச்சதாவும் ஆனா அவுரு கொடுத்த பணத்த அப்படியே அலமாரில வச்சத பாத்து பணத்துக்கு தீட்டு கெடையாது னு கேட்டு நையாண்டி வழியா மட்டும் எதிர்த்தத பத்தி சொன்னாங்க. அப்பிடியே தலைமுறை தலைமுறையா எப்படி சக மனுஷன்ல ஒரு பகுதியினர தவறுதலாவும் திட்டமிட்டும் மனித தன்மையற்ற முறைல ஒதுக்கி வச்சாங்கனு கொஞ்சம் பெருசாவே சொன்னாங்க. 

 ஆனா ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒரு விதமான கிருமி இருக்கும் அந்த கிருமிக்கு பழக்க படாதவங்க கிட்ட போகும் போது நோய் வரும் ஆனா கொஞ்ச நாள்ல சரியா போயிடும்னு சொன்னாங்க.


ஒரு நாள், என் நண்பன் என் வீட்டு விசேஷத்துக்கு வந்திருந்தான். எப்பவும்போல சாப்பிடுமுடிச்ச பிறகு என் வீட்ல இருந்தவங்க என் நண்பனோட பேச ஆரம்பிச்சாங்க சில கேள்வி பதில் னு பேசிகிட்டு இருக்க.. "உன் ஊரு என்னப்பா"? னு கேட்க அவனும் அவன் ஊர் பேர சட்டுனு சொன்னான், உடனே "ஊர்ல எங்கப்பா?" னு கேட்க கொஞ்ச மூச்செடுத்து அவன் ஏரியா பேர சொன்னான். "எதுக்குமா நீ துருவி துருவி கேள்வி கேட்குற" ன்றா போல பாக்க அவங்களா எனக்கு பதில் சொல்லாம என் ஃபிரண்டு கிட்ட "அந்த ஊர்ல எங்களுக்கு சொந்தக்காரங்க இருக்காங்க"னு சொல்லி நகர்ந்தாங்க 

என் நண்பன 'அதிகமா கேள்வி கேட்டுட்டாங்க' ன்ற எண்ணமும் அவன் கஷ்ட பட்டு பதில் சொன்னான் ன்ற நினைவோடு அந்த நாள் முடிஞ்சது.


வெளி மாவட்டத்துல நான் தங்கியிருக்கும் போது, என்னோட நண்பர் ஒருத்தர் அவர் வீட்டுக்கு என்ன கூப்பிட்டு போனாரு. வீட்குள்ள போகும்போதே "வாங்கப்பா" னு அவங்க அம்மா கூப்பிட, அந்த மாவட்டத்துக்கே உரிய பாணியில வார்த்தைக்கு வார்த்த மரியாதையும் அன்பும் கலந்து பேசுனாங்க.என்னதான் பொதுப்பண்பு னு இருந்தாலும் அதுலயே பல மாறுதலுக்கு சில விதிவிலக்குகாக நம்மல நாமே தயாரா இருக்க வேண்டியிருக்கு. அவங்க கேட்ட "நீங்க .."? ன்ற அடுத்த கேள்வி என்ன சில வினாடி பேச விடல, நல்ல வேளையா என் நண்பர் "அவன் என் ஆபீஸ் ஃபிரெண்ட், 4 வருஷமா தெரியும்"னு திசை மாத்தினார்.

    

    என்னதான் நம்ம நட்பு வட்டாரத்துல பாகுபாடு இல்லாம பழகினாலும் நம் முன் தலைமுறையும் ஏன் நம் தலைமுறையில் கூட ஒரு மனுஷனா வகைப்படுத்தி 'இந்த ஏரியா ஆளு இப்படித்தான் அந்த ஆளுங்க அப்டித்தான் இருப்பாங்க' னு முடிவு காட்டுறாங்க. யோசிக்கறது கஷ்டமான விஷயமான தான், அதனாலேயே முடிவு கட்டுறாங்க.


அப்படி முடிவுக்கற்ற ஒரு விஷயம்தான் அம்பேத்கார் நகர்னாலே ஆதி திராவிடர் இருக்கிற இடமா பாக்குறது. இந்த நிலை மாறி ஊருக்கு நடுவுல ஒரு முக்கிய தெரு பேர் 'அம்பேத்கார் தெரு' னு பேர் வைக்கணும் இல்லனா மாத்தனும். ஏன் புது புது நகர் உருவாகிக்கிட்டு தான் இருக்கு ஆனா அந்த நகர் பேர் எல்லாம் ஒன்னு ஆளுங்கட்சி ஆளுமையோட பேர் இருக்கும் இல்லனா தீடிர் நகர், புது நகர், மாடர்ன் அவென்யூ னு ஒரு பொது பெயரா இல்ல ரஹீம் நகர், ராம் நகர், டேவிட் நகர் னு மதம் சார்ந்த ஆளுமை பேரா இருக்கும். 

"அடேய் அப்ப அம்பேத்கார் பேர் ஆதி திராவிடர்காக நேந்து விட்டுட்டோமா"னு கேக்க தோணுது. "ஏன் பஜார் வீதி பீமாராவ் வீதி ஆகட்டும், கடை வீதி கக்கன் வீதி ஆகட்டும்". சமத்துவ சுடுகாடுக்காக இலட்சங்கள் பரிசளிக்கும் இன்றைய தமிழக அரசு வாழும்போதே சமத்துவம் காண வழி செய்யட்டும் நாம துணை நிற்போம்.

பேர் மாத்துனா  மட்டும் முழுமையான சமத்துவம் கிடையாது தான் ஆனா எதிர்ப்ப தாண்டி ஒருங்கிணைந்து ஒரு நல்ல மாற்றத்த தர முடியும் ன்ற அனைவருக்கும் தலைவரா இருப்பார் நம்ம அம்பேத்கார். இறுதியில், ஒரு சில ஜாதி மட்டும் ஒரு எடத்துல ஒதுங்கி இருக்கிறாங்க நிலைமை மாறி ஊர் முழுக்க மக்கள் இருக்காங்க அவங்களா சொல்லாம அவங்க ஜாதி தெரியவும் தேவை இல்லன்ற நிலை வரனும்.

         "தேவை அதிகார பரவல் மட்டுமல்ல!

          வாழிட பரவலும் தான்"


என்னதான் அம்பேத்கர் இயற்றின அரசியல் சாசனத்தின் அடிப்படைல உருவான சட்டங்கள் மூலம் பயன்கள் எல்லாம் ஊருக்குள்ள வந்து பயன் தந்தாலும்.. ஊருக்கு நடுவே ஒரு அம்பேத்கர் தெரு வரவில்லை இன்றும் என் ஊரில் 

         ஊருக்கு நடுவே வேண்டும் ஒரு அம்பேத்கார் தெரு!

        "ஒரு சாதிக்கு மட்டுமா தலைவன் நீ 

         இந்நாட்டு குடியரசின் எழுத்தாணி நீ

         சாதிய சுவர்கள் கற்களால் மட்டுமல்ல..

         பெயர் பலகையாலும் கட்டப்பட்டுள்ளது!

          கக்கன் ஜி நீங்கள் அம்பேத்கர் நகரில் 

          ஒண்டி குடித்தனம் நடத்தியது போதும் 

          ஒரு வேளை... உங்களுக்கும் பணம் இல்லையோ! 

           ஊர் நடுவே உங்கள் பெயர் குடியேற!!

            சரி அரசாங்கம் கொடுக்கட்டும் உங்களுக்காக"


            "ஜெய் பீம்! அன்பு பரவட்டும்.. தோழமை நிலைக்கட்டும் நம்மிடம்!!"


Friday, January 28, 2022

ஊர் விட்டு ஊர் வந்தவன்


அந்த ஒவ்வொரு ஊர் ஏரியால ஏதோ ஒரு வீட்ல 'தட' 'தட'னு தையல் மெஷின் ஓடற சத்தம் கேட்டுட்டு இருந்த காலம் அது, தென்னங்கீத்து டிப்போ இருந்த ரோடு, ஒன்னு இல்ல ரெண்டு டீ கடை, பூச்சி மருந்து கடை, லாட்டரி சீட்டு பெஞ்சு, ஜூஸ் கடை, காய் கறி கடை, பழைய பாணி பேக்கரி, அங்கயும் இங்கயும் ஒன்னு ரெண்டு ஹோமியோபதி அல்லோபதி டாக்டர் வீடு, சினிமா தியேட்டர் னு பஜார் இருக்கும். பெரும்பாலான கடையோட கதவு பல மடிப்பு பலகை தான்.

        கிண்டி தொழிற்பேட்டை கூட (சென்னை) மெட்ராஸ்க்கு வெளியே தான்னு  சொன்ன காலகட்டம். எக்ஸ்போர்ட் கம்பெனில வேலை சேர்ந்து சென்னை புற நகர் மக்கள் அவங்களோட வருமானத்தை உயர்த்திகிட்டு இருந்தாக. ஊருக்குள்ளேயே இல்லனா பக்கத்து ஊருல களை எடுக்கறது, நாத்து நடறது, அறுப்பு அறுக்கறது, நெல்லு குத்தறது, ஓலை முடையறது, புளி ஆயறது, சித்தாள் னு வேல செஞ்சி வருமானம் பாத்த பல பெண்களுக்கு இந்த எக்ஸ்போர்ட் வேல புதிய உலகத்த தந்துச்சு.

        நிலையற்ற ஆண்களை கொண்ட குடும்பத்துக்கு இந்த வேல வாழ்வாதாரமா இருந்துச்சு. பஸ்ஸுக்காக ரோடுக்கு போனா கிட்ட திட்ட ஒரு பஸ் வர ஒரு மணி நேரம் ஆகும் அதுக்காகவே சில எக்ஸ்போர்ட் கம்பெனி பஸ் அணுப்பிட்டு இருந்தாங்க.  எக்ஸ்போர்டுக்கு வேலைக்கு போகும்போது இவங்களோட ஆர்பரிப்பும் ஆரவாரமும் சித்திரை வெயில்ல சடசடனு மழை பெய்யறது போல இருக்கும், கம்பெனிலயிருந்து வரும்போது  மழை ஒஞ்சி முடிஞ்ச பிறகு மழைல நடந்த விஷயத்த ரசிச்ச மகிழ்சியான முகத்தோடயும், உஷ்ண மறுதல தங்கமா அலுப்பு தட்டுன முகத்தோட சிலரும் , மழைல நடந்த நிகழ்வ 'கிசு கிசு'ப்போட சிலரும்னு பல பெண்கள் வீடு திரும்பினாங்க.

    "அதாம்பா அந்த எக்ஸ்போர்ட்டுக்கு போதுல  அந்த பொண்ணுடா அப்பா தான் அவுரு"னு  சில பெண்கள் அவங்க வீட்டோடு அடையாளமா மாறுனாங்க. பொதுவா கிராமத்துல (எந்த சமூக குழுலயும்) ஒரு மனுஷன் எப்படி வித்தியாச படுறானோ அதுவே அவனோட அடையாளமா ஆயிடுது. செல்வாக்கு மிகுந்த ஆட்கள் அவங்களோட சாதி பெயர் அடையாளமா இருக்கும், அதே சாதியிலே இருக்கிற அடுத்த ஆளுக்கு கடை வச்சா கடைக்காருனு, சாமான் வித்தா சன்மான்கார்னு னு அவர் செஞ்ச தொழில் வச்சு அடையாளம் வச்சு கூப்பிடுவாங்க. இதுவே வேற ஊர்ல இருந்து அந்த ஊர்ல வந்தவங்கனா 'கோயம்பத்தூர்க்காரு மெட்ராஸ் ஆளுன்னு' அவங்க அடையாளம் ஆயிடும்.  

        இந்த சாதி மாதிரி தான் ஊர் விட்டு ஊர் வந்தவங்க நிலையும் பொறப்ப மாத்த முடியுமா? இல்ல முன்னோர் இருந்த ஊர தான் மாத்த முடியுமா? இல்லையே!!. என்ன தான் அமெரிக்காலேயே பொறந்து அமெரிக்காலேயே வளர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆனாலும் எங்க தமிழ் நாட்டை சேர்ந்த 'பெண்'னு நம்ம உழைச்சு வாங்காத வெற்றிய பெருமை கொண்டாடுறோம். ஒரு பெண் முன்ன வந்தா இன்னொரு சந்தோஷ படறதும் ஒரு நாட்டை சேர்ந்த ஒருத்தர் பல நாட்டு போட்டியாளர்களோட போட்டி போட்டு வெற்றி அடைஞ்சா அந்த நாட்டோட கோடில ஒருத்தர் சந்தோஷ படறதும் 'தான் ஆடா விட்டாலும் தான் தசை ஆடும்'ன்றா போல நடக்குது. ஆனா மொழி மதம் நாடு சாதி இனம் னு பாக்க தெரியாத குழந்தைகிட்ட நாம சிரிச்சா கண்ணம் இது, உதடு இது னு தெரியாத அந்த குழந்தை  திருப்பி சிரிக்கும். நம்ம அழுதாலும் அந்த குழந்த பரிதாபமா பாக்கும் சில குழந்த அழவும் அழுதிடும். இது தான் இயற்க்கை அழகே!. ஏன் எந்த உயிரோடயும் இப்படி ஒரு கண்ணுக்கு தெரியாத உணர்ச்சி பிணைப்பு இருக்கு. அதே மாதிரி ஊர் பெருமை பேசி பெருமை அடையரதும் இல்ல சந்தோஷ படறதும்.

        என்ன தான் இயற்கையா ஊர் பெருமை பேசறது இருந்தாலும் இதே நமுக்கு எதிரா இருக்கு. 1985லயே பல பேர் ஊர் விட்டு ஊர் மாறி குடி போனாங்க, ஆனா 1995ல தான் சென்னை புற நகர் மக்களுக்கு-பெண்களுக்கும்  ஊர் விட்டு ஊர் போய்  வேலை பாக்குறது ஒரு அனுபவமா இருந்துச்சி. அது வரைக்கும் (ஏன் இப்ப கூட) இப்படி குடி பெயர்ந்து வந்தா அவங்களுக்கு முதல் கிடைக்கற அடையாளம் 'ஊர் விட்டு ஊர் வந்தவன்'. ஒரு மூணு தலைமுறையா அதே ஊர்ல இருக்கிற மக்கள் கிட்ட இந்த பொருமல் இருக்கு பல சொல்லாடல் இது வெளிப்படும்  

 1. 'ஊர் விட்டு ஊர் வந்தவங்க எல்லாம் நல்லா இருகாங்க நாங்கதான்...'
 2. 'ஊர் விட்டு ஊர் வந்த உனக்கு இந்த ஊர் பத்தி என்ன தெரியும்...'
 3. 'ஊர் விட்டு ஊர் வந்தவன் எல்லாம் ஆடுறான் வச்சிகரன் அவனுக்கு...'

அடையாள படுத்தி பேசறது இதுக்கு மட்டுமா 

    'துலுக்கனுக்கு என்ன அவ்ளோ துணிச்சல்'
    'பார்ப்பான் பையன் மீன் புடிக்கற போல' னு 

பல சொல்லாடல் வச்சு அடையாள படுத்தி பேசப்படுது. இப்படி பேசறது - நான் வேற நீ வேற னு பிரிச்சு வைக்குது. 

ஏன் ஒரே மாவட்டத்துல ஒரே சாதியில குடி பெயர்ந்து வந்த குடும்பத்துக்கு கூட கொடுக்கற பெயர் ஊர் விட்டு ஊர் வந்தவங்க தான். அப்போ மும்பைல தமிழர்கள... ஏன் மத்த மாநிலத்து ஆள மராத்தி பேசுற அதே மாநிலத்து மக்கள் வேற்றுமை உணர்வோட பாக்குறதோ அமெரிக்கால மத்த நாட்டுலேயிருந்து குடி பெயர்ந்தவர்கள வேற்றுமை படுத்துறதோ சர்வ சாதாரணமான விஷயம் தான். (அமெரிக்க பூர்வ குடி செவ்விந்தியர்கள தான் இன்னைக்கு இருக்கிற இங்கிலாந்து பேர பிள்ளைகள் இல்ல!!!) ஆனா அது வெறுப்பா மாறி காழ்ப்புணர்ச்சியால அடிதடி வரைக்கும் போகுது.

ஆரியர்கள் யார் யார்னு பிரிச்சு பாத்து வந்தேறினு சாயம் பூசுறோம் அதே சமயம் அமெரிக்கால தமிழர்கள் மிக பெரிய பெரிய இடத்துக்கு போறாங்கனு சந்தோச படுறோம். அதே சமயம் "தமிழகத்த தமிழன் தான் ஆளனும்"னு சொல்ற படத்த பெருமையா பேசிகிட்டே... மும்பைல தமிழன் எப்படி கெத்தா தான் உரிமைய பாதுகாக்குறான் சொல்ற படத்த மலேசியால தமிழன் முன்ன வர்றதா பிடிக்காத மலேசியாகாரன் எப்படி சொல்ற படத்தையும் பெருமையா பேசுறோம்.  இந்த தமிழர்கள் அந்த அமெரிக்கால மும்பைல மலேசியால வந்தேறிகள் இல்லையா?! 

'எங்கிருந்து வந்தவன் எல்லாம் நல்லா இருக்கான்'ன்ற ஏக்கம் 
'எங்கிருந்தோ வந்தவன் அவன் சொந்த பந்தத்தை கூட வச்சிப்பான் நம்மளையா?'ன்ற எண்ணம் இப்படி பல விஷயத்தால நம்மலோட நம்பிக்கை வட்டாரத்துல இல்லாத ஆட்கள தள்ளி வைக்கிறோம். ஒரு பிரிவ மீண்டு வர்றதே வல்லமை தான்! இன்னொரு பக்கம் ஏதோ ஓன்னு இல்லன்ற இல்லாமையும் தான்..! சாதாரணமா எந்த மாற்றமும் இல்லாம அதே இடத்தில வாழறவங்களுக்கு குடி பெயர்ந்து வந்தவங்க மேல சந்தேகமும்/பயமோ/எரிச்சலோ அப்ப இப்போனு வந்து போகுது.
 
ஊர் விட்டு ஊர் வந்தவங்க அந்த ஊர் விழாக்கள், அடிப்படை கடவுள், சரித்திர சுவடுகள், ஆறாத பகை னு எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு அந்த ஊர் நல்லது கெட்டதுல பங்கு எடுக்கும் போதுதான் கொஞ்சம் கொஞ்சமா ஏத்துக்க முயற்ச்சி பண்ணுவாங்க.!!

 எந்த ஊருக்கு போனாலும் எந்த நாட்டுக்கு போனாலும் எந்த கடல்ல மிதந்தாலும் வானத்த அண்ணாந்து பாத்தா ஒரே கூரைல தான் இருக்கோம்னு தோணும்!!!